தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக, திமுக, அதிமுக மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது சிறுவர்களைப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தவெக, திமுக, அதிமுக மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியோர் வரும் மே 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் போது தாராளமாகப் பணப் பட்டுவாடா நடைபெற்றதாகவும், விதிகளுக்குப் புறம்பாகப் பள்ளிச் சிறுவர்களை வைத்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டதாகவும் கூறி கடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியது தொடர்பான இந்தக் கடுமையான குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கும், பிரதான அரசியல் கட்சிகளான தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றிற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், இதுகுறித்த தங்களின் விளக்கத்தை மே 29-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. தேர்தல் முடிந்துள்ள சூழலில் இந்த நீதிமன்ற உத்தரவு அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





