அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பாதிக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புறக்கணிப்பு!
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான மற்றொரு அணியும் என இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைப் பொதுக்குழு அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்ற அதிரடித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கட்சியில் மொத்தம் உள்ள 82 மாவட்ட செயலாளர்களில் எத்தனை பேர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமிக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர் என்ற அதிகாரப்பூர்வ விபரம் தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், எஸ்பி.வேலுமணி தரப்பிற்கு ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தை எஸ்பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர்.
ஜெயக்குமார் வராததால் பரபரப்பு: இந்த உள்கட்சி பூசலின் உச்சகட்டமாக, சென்னையின் முதன்மை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்றைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இதுவரை எஸ்பி.வேலுமணி தரப்பிற்கும் தனது வெளிப்படையான ஆதரவை அறிவிக்காத நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் யாருடைய பக்கம் சாய்வது என்ற குழப்பத்தில் இருப்பதாக அஇஅதிமுக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




