“சோழர் பெருமையை மீட்டெடுத்த பிரதமருக்குப் பாராட்டா?” – முதலமைச்சர் விஜய்யின் மௌனம் குறித்து வானதி சீனிவாசன் அதிரடி கேள்வி!
சென்னை:
சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு சோழர் காலப் பெருமையை உலகளவில் மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஒரு சிறு பாராட்டுக் கூட தெரிவிக்காமல் இருப்பதுதான் தமிழக முதலமைச்சர் விஜய்யின் ‘நாகரிக அரசியலா?’ என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகளை நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகம் (Leiden University) மீண்டும் இந்தியாவிடமே திருப்பியளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒட்டுமொத்த தமிழகமும் உச்சி முகர்ந்து கொண்டாடி வரும் வேளையில், தமிழக முதலமைச்சர் விஜய் இதுகுறித்து மௌனம் சாதிப்பது வெறும் மறதியல்ல, அது திட்டமிட்ட அலட்சியம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற விவகாரங்களுக்கு உடனடியாக அறிக்கை வெளியிடும் முதலமைச்சர், தமிழ் பண்பாட்டையும் வரலாற்றையும் உலகிற்குப் பறைசாற்றிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கத் தயங்குவது ஏன் என்றும் வானதி சீனிவாசன் வினவியுள்ளார்.
மாற்றத்தை ஏமாற்றும் மௌனம்:
தமிழகத்தில் ‘மாற்றம்’ என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய நடவடிக்கைகள், கடந்த கால திமுக ஆட்சியை விட எந்த விதத்திலும் வித்தியாசமானதாக இல்லை என அவர் விமர்சித்துள்ளார். தமிழ் வழி மரபில் வந்த ஒரு முதலமைச்சர், தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறு மீட்டெடுக்கப்படும்போது வாழ்த்து கூறாமல் இருப்பது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதலமைச்சர் விஜய்யால் மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை இந்த மௌனம் ஏமாற்றமடையச் செய்துள்ளதாகவும், சோழர் கால செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.




