“சட்டமன்றத் தேர்தல் முடிவு சுனாமி போன்றது, ஆனால் நிலையானது அல்ல” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு!
விருதுநகர்:
“நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சுனாமி போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அது என்றென்றும் நிலையானது அல்ல” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் உள்ள ஒரு தனியார் அரங்கில், அதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் அவைத்தலைவர் விஜயகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் முக்கியத் தீர்மானமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்குத் தங்களது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளிடையே பேசிய ராஜேந்திர பாலாஜி, “2026 தேர்தல் முடிவுகள் இத்தகைய திருப்புமுனையாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று வழிநடத்துவது காலம் நமக்குத் தந்த கொடையாகும். தற்போது கட்சிக்குள் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள சில விரிசல்களைத் தலைமை மிகத் திறமையாகக் கையாண்டு சரிசெய்து கொள்ளும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.




