தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு: மீறினால் நடவடிக்கை என எச்சரிக்கை!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அணி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராகவே அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள் என்றும், கட்சியின் இந்த உத்தரவை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.எஸ். மணியன், எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் என்பதை உறுதிப்படுத்தி 47 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அந்த கடிதத்தின் அடிப்படையிலேயே கொறடா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால் சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





