2-வது நாளாக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இரண்டாவது நாளாகத் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அதிமுக-வின் முக்கியத் தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரைச் சந்தித்த முதலமைச்சர், அவர்களின் தரப்பிலான ஆதரவு எம்எல்ஏக்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ், முதலமைச்சரை நேரில் கண்ட உற்சாகத்தில் அவரது கைகளைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார்.
முன்னதாக, மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அலுவலகத்திற்குச் சென்ற அவர், அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீனைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்று, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் வாழ்த்துப் பெற்றார். இறுதியாக, வேளச்சேரியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உடனிருந்தனர். அப்போது திருமாவளவன், முதலமைச்சர் விஜய்க்கு இந்திய அரசமைப்பின் முகப்பு பக்கத்தைப் பரிசாக வழங்கிக் கௌரவித்தார்.



