தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றம்: முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதன்முறையாக ஒலித்த ‘வந்தே மாதரம்’!
சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்கும் விழாவில், மாநில அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது பெரும் அரசியல் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் முன்னிலையில் முதலமைச்சராக விஜய்யும், அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த விழாவின் தொடக்கத்தில், வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், இறுதியாகத் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அரசுப் பதவியேற்பு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடல் இடம்பெற்றது இல்லை என்ற நிலையில், தவெக அரசின் இந்த நடவடிக்கை ஒரு புதிய அரசியல் முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வு விழாவிற்கு வந்திருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே ஆச்சரியத்தையும், பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




