தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றார் விஜய்: மேடையிலேயே ஆனந்தக் கண்ணீர் விட்ட பெற்றோர்!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இன்று தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், ஆளுநர் முன்னிலையில் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். விஜய் “தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் எனும் நான்…” என்று கூறி உறுதிமொழி ஏற்றபோது, அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தைக் கண்டு மேடையில் அமர்ந்திருந்த அவரது பெற்றோர், தனது மகன் எட்டியுள்ள இந்த உயரத்தைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியடைந்தனர்.
இந்த விழாவில் தேசிய மற்றும் மாநில அரசியலின் முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். குறிப்பாக, காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், திரையுலகப் பிரபலங்கள், நடிகை திரிஷா, முக்கிய விஐபிக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் என அரங்கம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. விஜய்யின் இந்த பதவியேற்பு விழா தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.



