ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு – இன்று விசாரணை!
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பதவியேற்கத் தடை கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பனுக்கும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே மிகக்கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை முடிவில், சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகள் பெற்று, பெரியகருப்பனை விட ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த முடிவில் அதிர்ச்சியடைந்த பெரியகருப்பன், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதால், சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். இன்று காலை இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளதால், திருப்பத்தூர் தொகுதி முடிவில் நிலவும் பரபரப்பு அதிகரித்துள்ளது.




