அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் சினோரா அசோக் காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!
தமிழக அமைச்சர் சேகர்பாபுவால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் துறைமுகம் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட சினோரா அசோக்கை, அதே தொகுதியின் திமுக வேட்பாளரான அமைச்சர் சேகர்பாபு தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்று புகார் மனு அளித்த சினோரா அசோக், அமைச்சர் சேகர்பாபுவிடமிருந்து தனக்கு ஆபத்து இருப்பதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் முகமூடி அணிந்துகொண்டு தொடர்ந்து எனது நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்; இதனால் நான் மிகுந்த அச்சத்தில் உள்ளேன்,” எனத் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், வேட்பாளர் ஒருவரே அமைச்சருக்கு எதிராகப் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



