திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தைத் தூர்வார வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இக்கோயில் தெப்பக்குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த 24-ஆம் தேதி குளத்தில் இறங்கிய இளைஞர் ஒருவர் சேற்றில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இந்து முன்னணி அமைப்பினர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், இனியும் விபத்துகள் நிகழாமல் தடுக்கத் தெப்பக்குளத்தை விரைந்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குளத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பராமரிப்பின்றித் தூர்ந்து போயுள்ள இக்குளத்தைச் சீரமைக்க வேண்டியது பக்தர்களின் பாதுகாப்பிற்கு அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




