மதுரை சித்திரை திருவிழா: சிகர நிகழ்வான தேரோட்டம் கோலாகலத் தொடக்கம் – மாசி வீதிகளில் வலம் வரும் மீனாட்சி-சுந்தரேஸ்வரர்!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா, ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவுடன் கலைகட்டி வந்த நிலையில், இன்று அதன் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து, இன்று காலை மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேர்களில் எழுந்தருளினர். “ஹர ஹர சங்கர, சிவ சிவ சங்கர” என்ற பக்தர்களின் முழக்கத்துடன், சிவ வாத்தியங்கள் முழங்க நான்கு மாசி வீதிகளிலும் தேர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட இந்தத் தேரோட்டத்தைக் காண மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பிற்காகப் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மாசி வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.






