மதுரை சித்திரை திருவிழா: திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா வந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரர்!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நேற்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மணக்கோல அலங்காரத்தில் சுவாமியும் அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் மாசி வீதிகளில் வீதியுலா வந்தனர்.
சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் வெள்ளி யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மணப்பெண் அலங்காரத்தில் அனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளினர். கோயில் யானை கம்பீரமாக முன்னே செல்ல, சிவ வாத்தியங்கள் முழங்க நான்கு மாசி வீதிகளிலும் இந்த வீதியுலா நடைபெற்றது. வீதிகளின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மணக்கோலத்தில் இருந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரரை மிகுந்த பக்தியுடன் தரிசனம் செய்தனர். மதுரை மாநகரே இந்தத் திருவிழா கோலத்தால் கலைகட்டியுள்ளது.






