என்டிஏ 120, திமுக கூட்டணி 80: அதிபன் டிவி கருத்துக்கணிப்பில் வெளியானது பரபரப்பு முடிவுகள்!
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்களின் தற்போதைய மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் அதிபன் டிவி தொலைக்காட்சி சார்பில் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தக் கருத்துக்கணிப்பின்படி, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 120 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தற்போதைய ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றியைப் பதிவு செய்யும் என இந்தக் கணிப்பு கூறுகிறது. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்றுவது கடினம் என்றும், சுமார் 27 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதால் அங்கே இழுபறி நிலை நீடிக்கலாம் என்றும் அதிபன் டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், இந்த முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.




