இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள்: சேலத்தில் பிரம்மாண்ட ஊர்வலம்!
சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பாரப்பட்டி கனகராஜ் தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக, திருவாகவுண்டனூர் பைபாஸ் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக ரஜினி ரசிகர் மன்றத்தினர் உற்சாகமாக ஊர்வலமாக வந்தனர். இந்தச் சந்திப்பின் போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு, அதிமுகவின் வெற்றியை உறுதி செய்வோம் என எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர்கள் சபதம் ஏற்றனர். இந்நிகழ்வில் பாரப்பட்டி, வீரபாண்டி, அரியானூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.




