இந்தியா – இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும்: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம்!
இலங்கையில் 10 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற இந்திய அரசின் வாக்குறுதி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள அவர், அந்நாட்டு பிரதமர் ஹரினி அமரசூரியா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாசா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரிடையே அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற கோட்பாட்டை இலங்கை அரசு வலுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் இலங்கை இடையேயான வலுவான கூட்டாண்மை காரணமாக, எதிர்காலத்தில் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விண்ணைத் தொடும் அளவிற்கு உயரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ‘இணைவோம், வளர்வோம்’ என்ற இந்திய அரசின் முழக்கத்தை இலங்கை அரசு திறம்படச் செயல்படுத்தி வருவதாகவும் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.




