ஒரே நாளில் 53 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம்!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 18-ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் ஒரே நாளில் 53 லட்சத்து 50 ஆயிரம் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய விநியோக சாதனையாகக் கருதப்படுகிறது.
பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவை அதிகப்படியாக வாங்கிச் சேமிக்க வேண்டாம் என்றும், பிஎன்ஜி (PNG) மற்றும் சிஎன்ஜி (CNG) விநியோகம் 100 சதவீதம் தடையின்றி நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருவதால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு மீண்டும் உறுதிபடத் தெளிவுபடுத்தியுள்ளது.




