மக்களவையில் காரசார விவாதம்: கடும் எதிர்ப்புக்கு இடையே தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் தாக்கல்!
மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
வாக்கெடுப்பு விவரம்:
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விவாதத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, மசோதாக்களைத் தாக்கல் செய்வது குறித்து முதலில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ‘டிவிஷன்’ (Division) முறைப்படி வாக்கெடுப்பு நடைபெற்றது.
- ஆதரவு: 251 வாக்குகள்
- எதிர்ப்பு: 185 வாக்குகள்
வாக்கெடுப்பின் முடிவில் பெரும்பான்மை ஆதரவுடன் மசோதாக்கள் வெற்றிகரமாகத் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நாட்டின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய இந்த முக்கிய மசோதாக்கள் குறித்து உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.




