திமுகவின் ரூ. 8,000 கூப்பன் விநியோகம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
தமிழகம் முழுவதும் திமுகவினர் 8,000 ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன்களை விநியோகம் செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் இந்த போலி கூப்பன்கள் வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் வழக்கறிஞர் அருள்முருகன் முறையீடு செய்தார். திமுகவினர் இத்தகைய கூப்பன்களை விநியோகம் செய்வதைத் தடுக்கவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது கோரிக்கையில் வலியுறுத்தினார்.
இந்த முறையீட்டைப் பரிசீலித்த தலைமை நீதிபதி அமர்வு, இது குறித்து முறையான மனுவாகத் தாக்கல் செய்யும் பட்சத்தில், அதனை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பணப்பட்டுவாடா தொடர்பான இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





