“திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு” – ஆண்டிபட்டியில் டிடிவி தினகரன் சாடல்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் லோகிராஜனை ஆதரித்து அவர் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே, தங்களுக்குள் இருந்த அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து தற்போது அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
பரப்புரைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் திமுகவிற்குச் சென்றதால் அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும், கடந்த தேர்தலில் அவர் பல கோடி ரூபாய் செலவு செய்துதான் வெற்றி பெற்றார் என்றும் விமர்சித்தார். திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும், இந்தத் தேர்தலில் அதற்குரிய பாடம் புகட்டப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.





