“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பிரதமர் மோடி மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” – முதலமைச்சர் ரங்கசாமி நெகிழ்ச்சி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும், அவர் நிச்சயம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக முதலமைச்சர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பிரதமரின் ஆசியும், உறுதுணையும் தங்களுக்குப் பெரும் பலமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மத்திய அரசின் ஒத்துழைப்போடு புதுச்சேரி வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
13 முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி இதுவரை 13 முறை சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றாலும், பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் இது சாத்தியமாகும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.
மாநில அந்தஸ்து கிடைப்பதன் மூலம் புதுச்சேரியின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் இன்னும் வேகம் எடுக்கும் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.




