காரமடை அருகே நீதிமன்ற உத்தரவை மீறி தொழுகைக்கு அனுமதி: இந்து அமைப்புகள் போராட்டம்
கோவை மாவட்டம் காரமடை அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக கூறி, கிராம மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரமடை அருகேயுள்ள வேலாயுதபுரம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பாதையை, இஸ்லாமியர்கள் வக்பு சொத்து எனக் கூறி தடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பாதையை அங்காளம்மன் கோயிலுக்கு செல்ல இந்துக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த இடத்தில் எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தவும், கஞ்சி காய்ச்சவும் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் காரமடை வருவாய் உட்கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்றும், அதிகாரிகள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விரைவில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.