2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல்
2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கி கலைஞர்களை கவுரவித்தார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள், இம்முறை ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு ஒரே மேடையில் வழங்கப்பட்டன. தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த விருதுகளின் அடிப்படையில் இவ்விழா நடைபெற்றது.
சிறந்த படங்களாக மாநகரம், அறம், அசுரன், கூழாங்கல், ஜெய் பீம், கார்கி ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டன. சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
அதேபோல், சிறந்த நடிகைகளுக்கான விருதுகளை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் பெற்றனர்.
விருது பெற்ற கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப் பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.