துணைவேந்தர் நியமன தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு
தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுக்கள் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்கள், நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக ஏற்கனவே நேர்காணல் செயல்முறைகளை மேற்கொண்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக தேடுதல் குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தால், அவை சட்டபூர்வமாக செல்லுபடியாகாது என்றும், இத்தகைய செயல்பாடுகள் மாநில அரசுக்கும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் தேவையற்ற நிர்வாக மற்றும் சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்றும் ஆளுநர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தலைவரின் பிரதிநிதியை தேடுதல் குழுவில் இணைக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கும் வரை, துணைவேந்தர் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.