வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு
ஆம்பூரை அடுத்த பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலை மேலாளர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள், மின்சாரத்தை நிறுத்தி அட்டகாசம் செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகிலுள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவர், தனியார் காலணி தொழிற்சாலையில் மேலாளர் பதவியில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல், இரவு நேரத்தில் வீட்டின் கேட்டை பூட்டி, குடும்பத்துடன் உறங்க சென்றுள்ளார்.
அந்நேரத்தில், நள்ளிரவில் சுவரை ஏறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள், முதலில் வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர், வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்துள்ளனர்.
பூட்டு உடையாததால் கடும் கோபமடைந்த கொள்ளையர்கள், மாடியில் பொருத்தப்பட்டிருந்த டிஷ் ஆண்டனா, காரில் வைத்திருந்த ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியே எறிந்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தப்பிச் சென்ற திருடர்களை கண்டறிய தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.