மகாதேவர் கோயில் சாலை சீரமைப்பு கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் நூதன போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மகாதேவர் கோயிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்த நிலையில் இருப்பதை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர்.
மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் நடந்து, ஓடி மற்றும் வாகனங்கள் மூலம் தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் இரண்டாவது சிவாலயமாக திக்குறிச்சி மகாதேவர் கோயில் இடம்பெறுகிறது.
இந்த கோயிலின் நுழைவாயில் முதல் திருக்கோயில் வரை செல்லும் சாலை, சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிலையில், இதுவரை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
சாலை சீரமைப்பு குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையை கண்டித்து, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்துதல், கோசாலையில் உள்ள பசுமாட்டிடம் கோரிக்கை மனுவை வழங்குதல், மேலும் தாமிரபரணி ஆற்றில் மனுக்களை மிதக்க விடுதல் போன்ற நூதன முறைகளில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.