தமிழர் பண்பாடுக்கும், இந்தியாவின் அடிப்படை நிலைப்பாட்டுக்கும் எதிராக உதயநிதி – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழர் பாரம்பரிய மதிப்புகளுக்கும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குமான அடிப்படை நிலைப்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் களம் பரபரப்பை அடைந்துள்ள நிலையில், தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராகவும், மத்திய அமைச்சராகவும் உள்ள பியூஷ் கோயல், திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் அரசியல் அணுகுமுறை குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சகிப்புத்தன்மை, வேறுபட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, அனைத்து மதங்களுக்கும் மரியாதை அளிக்கும் பண்பாடு ஆகியவை தமிழர் கலாச்சாரத்தின் அடையாளங்கள் எனக் குறிப்பிட்ட பியூஷ் கோயல், அந்த உயரிய பண்புகள் உதயநிதியின் பேச்சிலும் செயல்பாடுகளிலும் பிரதிபலிப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழர் பண்பாட்டின் அடிப்படை மதிப்புகளுக்கும், இந்தியாவின் தேசிய நிலைப்பாட்டிற்கும் எதிரான பாதையில் உதயநிதி செயல்பட்டு வருவதாகவும் அவர் சாடினார்.
இதனைத் தொடர்ந்து, திமுக தலைமையிலான தமிழக அரசை திறமையற்றதும், ஊழலில் மூழ்கிய அரசாகவும் விமர்சித்த பியூஷ் கோயல், மாநிலம் முழுவதும் திமுக அரசுக்கு எதிரான மக்கள் மனநிலை உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.