தமிழகத்தின் கடன் ரூ. 9.21 லட்சம் கோடியாக உயர்ந்ததன் பின்னணி – தங்கம் தென்னரசு விளக்கம்

2020–21 ஆட்சிக்கால முடிவில் அதிமுக அரசு விட்டுச்சென்ற கடனுக்கான 1.40 லட்சம் கோடி ரூபாய் வட்டி மட்டும் தாங்கள் கட்டிக்கொண்டிருப்பதாகவும், மத்திய அரசு வரிப்பங்கீட்டை முறையாக வழங்கினால் தமிழகத்தின் கடன் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு குறையலாம் என்றும் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

“2020–21 ஆட்சிக்கால முடிவில் அதிமுக அரசு விட்டுச்சென்ற கடனுக்கான 1.40 லட்சம் கோடி ரூபாய் வட்டி மட்டும் நாங்கள் கட்டிக்கொண்டிருக்கிறோம்.

2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் தொடக்கத்தில் தமிழகத்தின் கடன் 1 லட்சத்து 1 ஆயிரத்து 349 கோடி ரூபாயாக இருந்தது. அந்த ஆட்சி முடியும் போது, 2015–16ல் தமிழகத்தின் கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 66 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதாவது கடன் 108 சதவீதம் உயர்ந்தது.

அடுத்து, 2016–17 முதல் 2020–21 வரை அதிமுக ஆட்சி முடியும் போது, மாநிலத்தின் கடன் 4 லட்சத்து 80 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உயர்ந்தது — அதாவது 128 சதவீதம் உயர்ந்தது.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது தமிழகத்தின் கடன் 9 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது 93 சதவீதம் உயர்வாகும். தமிழகத்தின் கடன் வளர்ச்சி 128 சதவீதம் உயர்ந்தது அதிமுக ஆட்சியில்தான். எனவே, கடனைப் பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை.

தமிழகத்தின் கடன் உயர்வுக்கு அரசின் நிதி நிர்வாகமே காரணம் அல்ல. மாறாக, அதிமுக கூட்டணியில் இருக்கும் மத்திய பாஜக ஆட்சி, தமிழகத்தின் மீது பாகுபாட்டுடன் நடப்பதே முக்கிய காரணம்.

5வது நிதிக்குழுவிலிருந்து தற்போதைய 14வது நிதிக்குழு வரை, மத்திய வரிகளில் தமிழகத்தின் பங்கு 32 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசு வரிப்பங்கீட்டை சரியாக வழங்கினாலே, தமிழகத்தின் கடன் ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு குறையலாம்” என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

Facebook Comments Box