சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததையடுத்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “பாஜகவின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பொறுத்தவரை கட்சிப் பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பாகவும் அமைதியாகவும் பேசக்கூடியவர். அவர் கோபமாகப் பேசுவது நான் இதுவரை பார்த்ததில்லை.
எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர் விமர்சனங்களைச் செய்யும்போதும் அமைதியாகவும் பொறுமையாகவும் பேசுவார். வெளிநடப்பு செய்யும்போதும் சிரித்துக்கொண்டே யாருக்கும் கோபம் வராதவாறு நடந்து கொள்வார்.” (அவையில் சிரிப்பு)
“அப்படிப்பட்ட சிறந்த அரசியல்வாதியாக விளங்கும் நயினார் நாகேந்திரன் அவர்கள், 64 வயதை முடித்து 65வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.” (அவையில் சிரிப்பு)
“அவருக்கு எனது சார்பிலும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.
இதனையடுத்து அமைச்சர் முத்துசாமிக்கும் முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “எங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முத்துசாமி அவர்களுக்கும் இன்று பிறந்தநாள். அவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு, “பேரவை சார்பில் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.