“ஓர் அதிகாரியின் மீது கூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” – கரூர் விவகாரத்தில் அண்ணாமலை கேள்வி
கரூர் சம்பவம் மற்றும் திமுக அரசின் பிற நடவடிக்கைகள் தொடர்பாக 2026-ம் ஆண்டு மக்கள் மன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில், தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு திருமதி சரோஜினி அம்மாள் நினைவு கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து நிதியுதவியை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
“கரூரில் செப்.27-ம் தேதி நடைபெற்ற அரசியல் கட்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 பொதுமக்கள் உயிரிழந்தனர். சட்டப்பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் வழக்கம் போல அரசுக்கும் காவல் துறைக்கும் தவறு இல்லை என தெரிவித்துள்ளார்.
வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்ட பிறகு முதல்வர் 606 போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்ததாக கூறியுள்ளார். ஏடிஜிபி டேவிட் சன் செப்.28-ம் தேதி 500 பேர் பணியாற்றியதாக தெரிவித்தார். காவல் துறையின் செய்திக் குறிப்பில் சம்பவ இடத்தில் 350 பேர், பிற இடங்களில் 150 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையை மறைக்கும் வகையில் முரணான தகவல்கள் வெளிவந்துள்ளன, இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்து உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிகாலை 1.45 மணி தொடங்கி மதியம் 1 மணிக்கு உடற்கூராய்வு செய்து 39-வது உடலை ஒப்படைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. உடற்கூராய்வு அவசரமாக நடைபெற்றதா என்பது சிபிஐ விசாரணைக்குப் பிறகு தெளிவாகும்.
திருமாவளவன் கூறியபடி, சாலையில் நடந்த மோதலுக்கு நான் காரணம் அல்ல. நான் முதலில் காவல் துறையில் பணியாற்றி பல ரவுடிகளை கையாள்ந்து அரசியலுக்கு வந்தேன். எனவே மிரட்டல், உருட்டல் எல்லாம் என்னிடம் தொடர்பில்லை.
கரூர் சம்பவத்திற்கு பின் யார் உள்ளனர் என்பது முக்கியம். இது சிபிஐ விசாரணைக்குப் பிறகு வெளிப்படும். காவல் துறைக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரம் இருந்தபோதும் ஏன் பயன்படுத்தப்படவில்லை? நாங்களும் தவறு செய்துள்ளோம் என்று அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பொறுப்பு உள்ளது, ஆனால் அவர்கள் மட்டும் குற்றவாளிகள் என்று சொல்லக்கூடாது. 41 பேர் உயிரிழந்த பின் ஓர் அரசு அதிகாரி மீது கூட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
அண்ணாமலை மேலும் கூறியது: “சபாநாயகர் செயல்பாடுகள் திமுக தொண்டரை விட சிறந்தவையாக உள்ளன. பாஜக-வை சேர்ந்த 4 எம்எல்ஏ-க்களை சபாநாயகர் அவமதித்துள்ளார். அதிமுக-வினர் கருப்பு பட்டை அணிந்து வந்ததையும் அவர் விமர்சித்துள்ளார்.