கரூர் சம்பவம் | உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும்: முதல்வர் உறுதி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர், “இந்த சம்பவத்தை விசாரிக்க செப்.28-ம் தேதி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அக்.3-ம் தேதி ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இந்த சம்பவத்தை சட்டப்படி விரைந்து கையாண்டது. அனுமதி வழங்கல், மருத்துவ உதவி, நிவாரண உதவி அனைத்தும் சரியான முறையில் நடந்தன. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் இவ்விழக்கு சிபிஐ விசாரணைக்காக ஒப்படைக்கப்பட இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான் எனது 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். நடத்தியும் இருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தும்போது அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும்.
கட்டுப்பாடுகள் மீறப்படும்போது அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சிகளை நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான், நமது தமிழ்நாடு மக்கள்தான். சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவியபோது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ மூலமாக எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் கட்சித் தொண்டர்களும் அப்பாவி பொதுமக்களும் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்றுதான் நான் குறிப்பிட்டேன். இறந்தவர்கள் நமது உறவுகள் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
அதுமட்டுமின்றி, அரசின் உயர் அலுவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து உண்மைகளை வீடியோ ஆதாரத்தோடு தெளிவுபடுத்தினார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரையும் காத்தது நமது அரசு. அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்தது நமது அரசு.
உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்பதை உறுதியோடு நான் சொல்கிறேன். அதேநேரத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும் பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும்விட மக்களின் உயிரே முக்கியம், மக்களின் உயிர் விலைமதிப்பற்றது. இதை மனதில் கொண்டு செல்பட வேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.