அன்புமணி வலியுறுத்தல்: கேரள மாநிலத்தைப் பின்பற்றி சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், கேரள மாநிலத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தப்பட்ட சேவை பெறும் உரிமைச் சட்டம், பொதுமக்கள் கோரும் சேவைகள் 30 நாட்களில் வழங்கப்படாவிட்டால், அது வழங்கப்பட்டதாகக் கருதப்படுவதோடு, சேவை வழங்கத் தவறிய அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தச் சட்டத்தின் படி, மக்கள் கோரும் அனைத்து சேவைகளும் அதிகபட்சம் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். ஒருவேளை சேவை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டால், காரணங்களுடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும். கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலகம் மூலமாக அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பம் பெறுதல் முதல் சேவை வழங்குதல் வரை அனைத்துக் கட்டங்களும் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் கேரள சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கில் கேரள அரசு எடுத்த இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அதே நேரத்தில், இதுபற்றி திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்துக்குரியது.

முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நல்லுறவு கொண்டுள்ளார். எனினும், கேரளத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து நல்ல திட்டங்களும் — பொருள்கள் கொள்முதல் விலை முறை, சேவை பெறும் உரிமைச் சட்டம் போன்றவற்றை — தமிழகத்தில் செயல்படுத்துவதில் ஸ்டாலினுக்கு ஆர்வம் இல்லை.

இது, தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாததையே காட்டுகிறது. ஆகையால், வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box