முதல்வர் ஸ்டாலின்: இதுவரை 75 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைப்பு தொடங்கியது

“எளிய மக்களின் வெற்றிதான் நமது அரசின் உண்மையான வெற்றி. பல ஏழை வீரர்களின் கனவுகளை நனவாக்குவதில் விளையாட்டுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எந்த மாநிலமும் செய்யாத அளவுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்துள்ளோம்,” என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டிகளின் நிறைவு விழாவில் அவர் பேசியதாவது:

“தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உழைக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். திறமையான இளைஞர்களை கண்டறியச் செயல்படும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டுகள். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் எட்டிய முன்னேற்றம் அனைவருக்கும் தெரியும்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

“அதிமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு உட்கட்டமைப்புக்காக ரூ.170.31 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், எங்கள் திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.601.38 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். மொத்தமாக ரூ.1,945.07 கோடி நிதி விளையாட்டு துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், திராவிட மாடல் ஆட்சியின் கீழ், விளையாட்டு துறைக்கு இது ஒரு பொற்காலம் ஆகி உள்ளது.

பொருளாதார ரீதியிலும் தமிழகமே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம். இளைஞர்களின் நலனும், விளையாட்டு துறையும் ‘The Young and Energetic Minister’ ஆன உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டதால், மிகச் சிறந்த பலனைப் பெற்றுள்ளோம்,” எனவும் கூறினார்.

மேலும், “தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த 5,393 வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுவரை 75 தொகுதிகளில் அவை அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் போல விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்யும் மாநிலம் வேறு இல்லை. எளியவர்களின் வெற்றியே நமது வெற்றி. விளையாட்டில் உழைத்து, வெற்றி பெற்று தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்திடுங்கள்,” என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

Facebook Comments Box