ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் – மீன் ஏற்றுமதியில் ரூ.10 கோடி இழப்பு!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நான்காவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வணிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 8ஆம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோரின் நான்கு விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. அந்தப் படகுகளில் இருந்த 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்யக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தம் தொடங்கினர். அதேசமயம், கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இன்றும் நான்காவது நாளாக ராமேசுவரம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டு இருந்தன. மேலும், 3,000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் கடந்த நான்கு நாட்களாக மீன் ஏற்றுமதி வணிகத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Facebook Comments Box