டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைப்பு

எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்த பின்னர், டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

எல்பிஜி எரிவாயு வழங்கும் டேங்கர் லாரிகளுக்கான தற்போதைய ஒப்பந்தம் காலாவதியாகும் போது, புதிய ஒப்பந்தங்களை வழங்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. இந்த டெண்டர் நடைமுறைகள் முடியும் வரை, தற்போதைய ஒப்பந்தங்கள் 2025 அக்டோபர் முதல் 2026 பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

பெரும் முதலீடு செய்த டேங்கர் லாரிகளை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற முடியாததால், ஒப்பந்தத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரி தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அக்.9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வழக்குகள் தாக்கல் செய்தன. வழக்கில், டேங்கர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு வழங்கலில் தடைகள் ஏற்படும் எனக் கூறப்பட்டது.

நீதிபதி தண்டபாணி முன் விசாரணையில், எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், புதிய டெண்டர் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்பதால் தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதை லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஏற்றுக்கொண்டது.

இதன் அடிப்படையில், நீதிபதி தற்போதைய ஒப்பந்தத்தை 2026 மார்ச் வரை நீட்டித்து, இடைப்பட்ட காலத்தில் எந்த வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என சங்கத்துக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்தார்.

Facebook Comments Box