திருச்செந்தூர் கோயிலில் 4 மாதத்தில் அறங்காவலர் குழு அமைக்க உத்தரவு: மதுரை உயர் நீதிமன்றம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 மாதத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்து கூறியதாவது: “இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி, அதன் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் 5 உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும். அந்த 5 உறுப்பினர்களில் ஒருவரை பெண்ணாகவும், ஒருவரை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் நியமிக்க வேண்டும். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறங்காவலர் குழு இல்லை. எனவே, இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி அந்த குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி பூர்ணிமா விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். அறநிலையத்துறை தரப்பில், “கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார். கோயில் குடமுழுக்கு பணிகள் காரணமாக குழு உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
இதற்கு நீதிபதிகள், “அறங்காவலர் குழு தலைவர் நியமனம் செய்து ஓராண்டு முடிவடைந்துள்ளது. ஆனால் உறுப்பினர்களை ஏன் நியமிக்கவில்லை? இது விதிகளுக்கு முரணாகும். காரணம் என்ன?” என கேள்வி எழுப்பினர். அரசுத் தரப்பில், “உறுப்பினர்கள் நியமன பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என தெரிவித்தனர்.
இதையடுத்து, நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறையின் முதன்மைச் செயலருக்கு 4 மாதத்திற்குள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவை அமைக்க உத்தரவிட்டது. காலக்கெடுவானால், நீதிமன்றமே உறுப்பினர்களை நியமனம் செய்யும் எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்துவைத்தது.