ரயில் விபத்தில் துண்டான கையை மாற்றி பொருத்தி சிகிச்சை — ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
சென்னையில் ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சிகிச்சை அளித்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் அபூர்வ சாதனை புரிந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் சாந்தாராமன் தெரிவித்ததாவது: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது தொழிலாளி ஒருவர் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி ரயில் விபத்தில் பலத்த காயமடைந்தார். விபத்தில் அவரது இடது கை தோள்பட்டை வரை துண்டாகியது; வலது கை மணிக்கட்டுக்கு மேல் நசுங்கிய நிலையில் இருந்தது. இரு கைகளும் பயன்பாடற்ற நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை துறை பேராசிரியர் மருத்துவர் பி. ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் — உதவி பேராசிரியர்கள் உ. ரஷிதா பேகம், வி. எஸ். வளர்மதி, வி. சுவேதா, முதுநிலை மருத்துவர்கள் ஷோனு, அன்னபூரணி, விக்ரம், சந்தோஷினி, மற்றும் மயக்கவியல் நிபுணர் ஜி. சண்முகப்பிரியா — இணைந்து சிகிச்சை மேற்கொண்டனர்.
அவர்கள், துண்டான இடது கையை நோயாளியின் வலது முழங்கையில் இணைத்து, சுமார் 10 மணி நேரம் நீடித்த அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். இதில் எலும்பு, தசை, நரம்பு மற்றும் இரத்தக் குழாய்கள் அனைத்தும் மிக நுணுக்கமாக இணைக்கப்பட்டன. இதன் மூலம் வலது கையில் இரத்த ஓட்டம் மீண்டும் சீராகத் தொடங்கியது.
அறுவைச் சிகிச்சைக்கு பிறகு நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கையை மீண்டும் இயக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
‘கிராஸ் ஹேண்ட் ரீ-ப்ளான்டேஷன்’ எனப்படும் இந்த அரிதான அறுவைச் சிகிச்சை, அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பு இந்தியாவில் ஒரே முறை மட்டுமே இப்படியான சிகிச்சை நடந்துள்ளது; உலகளவில் இதுபோன்ற மூன்று சம்பவங்களே உள்ளன.
இரு கைகளையும் இழந்திருந்த நோயாளிக்கு குறைந்தபட்சம் ஒரு கையை மீட்டெடுக்க வைத்திருப்பது மருத்துவர்களின் மிகப்பெரும் சாதனையாகும் என டீன் சாந்தாராமன் தெரிவித்துள்ளார்.