இருமல் மருந்து விவகாரம்: நிறுவன உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை
மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து காரணமாக 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக, சட்டவிரோத நிதி பரிமாற்றம் நடந்தது என்ற குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத் துறை (ED) இன்று பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது.
சோதனை, இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்மாசூட்டிக்கல் நிறுவனம், அதன் உரிமையாளர் ரங்கநாதன், மேலும் சில அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்பான இடங்களில் நடைபெற்றது.
கடந்த மாதம் மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் ‘கோல்ட்ரிப்’ என்ற இருமல் மருந்தை அருந்தியதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது. விசாரணையில், அந்த மருந்தில் டைஎதிலீன் கிளைகோல் எனும் நச்சு இரசாயனப் பொருள் மிக அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது, மேலும் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.
இந்த மருந்து சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், அதற்காக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இதன் அடிப்படையில், சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ரங்கநாதனின் வீட்டிலும், திருவான்மியூர் பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரி தீபா ஜோசப் வீட்டிலும், அண்ணாநகர் பகுதியில் கார்த்திகேயன் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள மருந்து உற்பத்தி ஆலை மற்றும் குரோம்பேட்டை பார்வதிநகர் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் சீனிவாசன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனை முடிந்த பிறகே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்களும், மருந்து ஏற்றுமதியில் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி முறைகேட்டின் அளவும் வெளிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்தியப் பிரதேச போலீஸார் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை மருந்து ஆலையுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதே நேரத்தில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளும் இணைந்து விசாரணையில் ஈடுபட்டனர்.