பழனிசாமி தலைமையில் என்டிஏ ஆட்சி அமைக்கும்: காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பேச்சு

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம், உச்ச நீதிமன்றமே தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று இரவு நடைபெற்ற “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற நிகழ்வில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

“மருதுபாண்டியர் எடுத்த ஜம்பு பிரகடனத்தைப் போல, திமுக ஆட்சியை விரட்டி, பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை உருவாக்கும் பிரகடனத்தை காரைக்குடியில் எடுப்போம்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

“திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன. காரைக்குடி நிகழ்ச்சிக்கு மலர்தூவும் ஹெலிகாப்டர் அனுமதி கேட்டபோதும், காவல்துறை மறுத்துவிட்டது. இதுகுறித்து ஒரு போலீஸ் அதிகாரியை தொடர்புகொண்டேன், ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

போலீஸ் அதிகாரிகள் திமுக ஆட்சியை நம்பி தங்கள் கடமையை தவறாக செய்ய வேண்டாம். சட்டப்படி நடக்கவில்லை என்றால், ஆட்சி மாற்றம் வந்ததும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வரின் நிகழ்ச்சிகளுக்குத் தேவையான இடங்களில் உடனே அனுமதி கிடைக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் கேட்டால் மறுக்கப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்டதின் விளைவாகவே கரூரில் 41 பேர் உயிரிழந்தனர்.

தமிழக அரசின் விசாரணை நியாயமானதாக இருக்காது என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதேபோல், உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரித்த அதே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கரூர் சம்பவத்துக்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி சம்பவ விசாரணையே இன்னும் முடிவடையவில்லை.

கரூர் சம்பவம் தொடர்பாக ஆட்சியரும், எஸ்பியும் விளக்கம் அளிக்காமலேயே ஆணையம் அமைக்கப்பட்டது. நாங்கள் இதுகுறித்து முன்பே உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். இப்போது அந்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உரிய தீர்ப்பளித்துள்ளது.

கரூர் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவர். தேசிய ஜனநாயக கூட்டணி இயற்கையாகவும், நேசத்தோடும் அமைந்த கூட்டணி; இது எம்.ஜி.ஆர் ஆசிர்வாதத்தோடு உருவானது. விரைவில் பிரதமர் நரேந்திர மோடி சிவகங்கை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வருவார்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்புமுருகானந்தம், மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, நயினார் நாகேந்திரனுக்கு பிள்ளையார்பட்டியில் மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் பாஜக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

Facebook Comments Box