இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து வெளியே சென்றிருந்தால், தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியினை பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமை வகித்தார். நிகழ்வில் எம்எல்ஏக்கள் மாங்குடி மற்றும் தமிழரசி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் கார்த்தி சிதம்பரம், 11 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.19 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர்கள் வழங்கினர். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:

“சென்னையில் வழக்கறிஞர் மற்றும் விசிக சார்பில் ஏற்பட்ட பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் அதை விசாரித்து தீர்வு கூறும். இந்த விவகாரத்தில் யாரும் பின்புலத்தில் உள்ளதாகக் கருதினால் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்; அரசியல் கருத்துக்கு இங்கு இடமில்லை.

22 குழந்தைகள் உயிரிழந்த இருமல் மருந்து தமிழகத்தில் இருந்து சென்றிருந்தால், தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். அரசு விசாரணை நடத்தி அறிக்கையை வெளியிட வேண்டும். 1984ல் ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடந்தது; அதற்குப்பின் பிளாக் தண்டர் ஆபரேஷன் நடந்தது.

சரித்திரம் தெரிந்தவர்களுக்கு இரண்டு ஆபரேஷன்களுக்கும் உள்ள வேறுபாடு புரிந்திருக்கும். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற காரைக்குடிக்கு நயினார் நாகேந்திரன் வந்துள்ளார். விருந்தோம்பல் நடைபெற்றும், பத்திரமாகச் செல்ல வேண்டும். நெல்லை காவல் நிலையத்திற்கு பெட்ரோல் குண்டு வீசியோருக்கு அரசு இரும்புக் கரம் காட்ட வேண்டும். நெல்லை பகுதியில் அதிகமான கூலிப்படையினரை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

Facebook Comments Box