விருதுநகரில் அட்டை மில்லில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி; இருவருக்கு மூச்சுத் திணறல்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஒரு அட்டை மில்லில் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதால் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தூர் அருகே உள்ள என்.சுப்பையாபுரத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த சுஜாத் என்பவருக்கு சொந்தமான அட்டை மில் ஒன்று செயல்படுகிறது. இதில் வட இந்தியா மாநிலத்திலிருந்து வந்த தொழிலாளர்களையும் சேர்த்து 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை பிஹாரைச் சேர்ந்த சோன்லால் (17), அபிதாப் (30) மற்றும் என்.சுப்பையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் (35) ஆகியோர் கழிவு தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது விஷவாயு தாக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே சோன்லால் உயிரிழந்தார். அபிதாப் மற்றும் கணேசன் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மீட்கப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
விஷவாயு தாக்கி உயிரிழந்த சோன்லாலின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.