அக்டோபர் 14 முதல் 17 வரை நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17 வரை 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: “இன்றைய ஆய்வுக் கூட்ட முடிவின்படி, சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை நடைபெறும்.
நாளை காலை சட்டப்பேரவை தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அதன்பின், கரூரில் நடந்த துயரச்சம்பவம் மற்றும் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பீலா வெங்கடேசன் ஆகியோருக்கான இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். பின்னர் எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும்.
அக்டோபர் 15ஆம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அக்டோபர் 17ஆம் தேதி விவாதத்திற்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் வழங்குவார்,” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.