வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழி சுமத்துகிறார் திருமாவளவன் – அண்ணாமலை குற்றச்சாட்டு
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “திருமாவளவன் வன்முறைத்தனமான அரசியலை செய்து அதிலிருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழி சுமத்துகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“கரூர் நிகழ்வைப் போல, காஞ்சிபுரத்தில் மருந்து உண்டதால் 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நடந்தது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. நீதியரசர் மீது தாக்குதலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் தரப்பினர் ஒரு வழக்கறிஞரை தாக்கியுள்ளனர். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனாலும் மேடையில் ‘நாங்கள் தட்டினோம்’ என்று பெருமையாகச் சொல்கிறார்.
அவரும், அவருடன் இருப்பவர்களும் பாகிஸ்தானுக்கு போவது நல்லது; ஏனெனில் அங்குதான் இப்படி முறைக்கும் அரசியல் நடக்கிறது. ‘முறைத்தவர்களை தட்டவேண்டும்’ என்று நினைப்பவர்கள் தமிழ்நாட்டில் இடம் பெற முடியாது.
தனியார் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பிய பிறகே நான் எக்ஸ் தளத்தில் பதிவு செய்தேன். ஆனால் திருமாவளவன் அதை திட்டமிட்ட நடவடிக்கையாகப் பேசுகிறார். அவர்மீது யாரும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார்களா என்பதைப் பார்க்கவேண்டும். அப்படி இல்லையெனில், அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். வன்முறைத்தனமான அரசியலை செய்து அதற்குப் பொறுப்பை பாஜக, ஆர்எஸ்எஸ், என்னிடமே சுமத்துவதை நிறுத்தவேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் 2008 மும்பை தாக்குதல் குறித்து, ‘நாங்கள் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருந்தோம்; ஆனால் அமெரிக்கா அழைத்த பிறகு முடிவை மாற்றினோம்’ என்று கூறினார். அதைப் பிரதமர் சமீபத்தில் சுட்டிக்காட்டியபோது சிதம்பரம் ‘நான் அப்படி சொல்லவில்லை’ என மறுத்தார்.
இன்று சிதம்பரம், ப்ளூ ஸ்டார் தாக்குதல் நிகழ்ந்திருக்கக் கூடாது, அதற்காக இந்திரா காந்தி உயிரிழந்தார் என பேசுகிறார். ஆனால் அதன்பிறகு 1984-ல் டெல்லியில் சீக்கியர்களை தேடி கொன்றதை ஏன் மறக்கிறார்? அப்போது இந்திரா குடும்பத்தினர் ‘பெரிய மரம் விழும்போது பூமி அதிரும்’ என்று கூறினர். இன்று சிதம்பரத்திற்கு ஞானோதயம் வந்தது போல இருக்கிறது — சரித்திர உண்மைகளை முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.
டிடிவி தினகரன் கூறிய பாஜக கூட்டணி குறித்த கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. அதிமுக கூட்டத்தில் தவெக கொடி தோன்றியது குறித்து எது உண்மை, எது பொய் என்பது தெரியவில்லை. சிலருக்கு வேறு கட்சிகள் பிடிக்கலாம்; அவர்கள் கொடியுடன் வரலாம். சிலர் பல கட்சிக் கார்டுகளை வைத்திருக்கிறார்கள். இப்போது இரண்டு கட்சிகளையும் சமமாகப் பார்க்கும் ஒரு கலாச்சாரம் உருவாகியுள்ளது. இது நல்லதா, கெட்டதா என்பதைக் கடந்து மக்கள் கூட்டத்திற்கு வருகிறார்கள் என்பதே முக்கியம்.
திமுகவை தோற்கடிப்பதே பொது நோக்கம். அதற்காக சிந்தாந்த வேறுபாடுகளை தாண்டி கூட்டணி அமைத்துக்கொள்ளலாம்,” என அண்ணாமலை தெரிவித்தார்.