முதல்வர், நீதிபதி குறித்து அவதூறாக பதிவு: திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் கைது
தமிழக முதல்வர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக திண்டுக்கல் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டியைச் சேர்ந்த நிர்மல்குமார் (வயது 35), தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் குறித்து நிர்மல்குமார் தனது முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக முதல்வர் மீதும் அவதூறு கருத்துக்களை பதிவு செய்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சாணார்பட்டி போலீஸார் நேற்று நிர்மல்குமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.