விஜய்யுடன் தொலைபேசியில் பேசினீர்களா? – எடப்பாடி பழனிசாமியின் பதில்!

“தவெகவினர் தங்களது விருப்பத்தின்படியே அவர்களின் கட்சி கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு அளிக்கின்றனர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு நான் விஜய்யுடன் தொலைபேசியில் எந்தவிதமான உரையாடலும் நடத்தவில்லை,” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

“தவெகவினர் தங்களது விருப்பத்திற்கேற்ப வரவேற்பளிக்கின்றனர். அவர்களை வரவேற்க தலைமையின் அனுமதி அவசியம் என்று எங்கள் மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்திருந்தனர். இருந்தாலும், அவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர். இதை சில கட்சிகள் பொறுக்க முடியாமல் விமர்சனங்கள் செய்து வருகின்றன.

கரூர் சம்பவம் நடந்தவுடன் நான் உடனே பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.

நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்த நாள்முதல் சிலர் எங்களை குறிவைத்து பேச தொடங்கினர். நாங்கள் யாருடன் கூட்டணி வைப்பது என்பது எங்கள் முடிவு. திமுக கூட்டணியில் இருப்பவர்கள் எங்களைப் பற்றி விமர்சிக்க என்ன உரிமை?

திமுக கூட்டணிக் கட்சிகள் இப்போது ஆட்சிப் பங்கும் அதிக தொகுதிகளும் வேண்டும் எனக் கோர ஆரம்பித்துள்ளன. இதனால் திமுக கூட்டணியில் விரிசல் தோன்றும் நிலை உருவாகியுள்ளது.

எங்கள் கட்சியில் 2 கோடி தொண்டர்கள் உள்ளனர். தேர்தல் நெருங்கும் போதே கூட்டணி முடிவாகும். நயினார் நாகேந்திரன் தொடங்கும் பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பார்கள். விவசாயிகளும் பொதுமக்களும் வழங்கும் ஆதரவுடன் அடுத்த ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும்,” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Facebook Comments Box