“கரூர் துயரத்தை வைத்து யாரையும் மிரட்டி அரசியல் லாபம் தேட பாஜக முயற்சி” – முதல்வர் ஸ்டாலின்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கும் விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழகத்தில் மூன்று முறை பெரிய பேரிடர்கள் தாக்கியபோதும் ஒன்றிய நிதியமைச்சர் உடனடியாக வரவில்லை, நிதியுதவியும் தரவில்லை. ஆனால் கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்துக்கே உடனே வருகிறார். இதில் அரசியல் பலன் கிடைக்குமா, இதை வைத்து யாரையும் மிரட்டலாமா, உருட்டலாமா என பாஜக பார்க்கிறது. யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி போலவே பாஜக நடந்து கொள்கிறது” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
- மீனவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் இலங்கை கடற்படை தாக்குதல்தான். ஒன்றிய பாஜக அரசு இதுகுறித்து எதுவும் செய்யவில்லை.
- கச்சத்தீவை மீட்பதே மீனவர் நலனுக்கான தீர்வாகும். இதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியிருந்தாலும், ஒன்றிய அரசு அதை ஏற்க மறுக்கிறது.
- இலங்கை வெளியுறவு அமைச்சர் கச்சத்தீவை தர மாட்டோம் எனக் கூறியபோதும், இந்திய வெளியுறவு அமைச்சகம் அதற்கு பதிலளிக்கவில்லை. தமிழர்களின் பிரச்சினைகள் ஒன்றிய பாஜக அரசுக்கு பொருட்டல்ல.
- ஜிஎஸ்டி, நிதிப்பகிர்வு, கல்வித்துறைக்கு நிதி மறுப்பு, நீட், தேசிய கல்விக் கொள்கை, கீழடி அறிக்கைக்கு தடைகள், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தமிழகத்திற்கு பாஜக அரசு தொடர்ந்து வஞ்சனை செய்கிறது.
அவர் மேலும், “அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. அதனால் கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் லாபம் தேடுகிறார்கள். மாநில நலன்களை பறிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளது. இந்த கூட்டணிக்கு எந்த கொள்கையும் இல்லை. ஊர் ஊராக சுற்றி யாராவது கூட்டணிக்குள் வருவார்களா என பழனிசாமி பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவர் மைக் கிடைத்தால் போதும் என்று எல்லோரையும் திட்டுகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு அவர்கள் செயல்திட்டத்தை வேகப்படுத்தியுள்ளனர். அவர்களை எதிர்க்கும் பணி அடுத்த திமுக ஆட்சியிலும் தொடரும்” என்றார்.