புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தவும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செயல்திட்டங்களை வகுக்கவும் பாஜக சார்பில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
மாநில சிந்தனை அமர்வு கூட்டம், மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் ஹோட்டல் அண்ணாமலையில் நடந்தது. இதில் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய தொழில் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மாநில மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, உள்துறை அமைச்சர் நமசிவாயம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதி, அமைச்சர் ஜான்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்படுவது, தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்.டி.ஏ.) வலுப்படுத்துவது, பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை அனைத்து கிளைகளிலும் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன. எம்எல்ஏக்கள் சாய் சரவணன் குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், தீப்பாய்ந்தான் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாஜக நிர்வாகிகள் கூறுகையில்:
“வரும் 2026 தேர்தலில் என்.ஆர். காங்., பாஜக, அதிமுக அடங்கிய என்.டி.ஏ. கூட்டணியாக போட்டியிடுகிறது. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக கூட்டணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாகப் பேசப்பட்டன.
மேலும், நாளை பழைய துறைமுக வளாகத்தில் பாஜக மாநில பொதுக்குழு கூடுகிறது. இதில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள இரு மத்திய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அவர்கள் கட்சி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்து, மேலிடத்தில் தெரிவிக்கவுள்ளனர். அதன்பின் தேர்தல் வியூகம் வகுக்கப்படும்” என்றனர்.