பெரம்பலூர் வர இயலாததற்கு மன்னிப்பு – விஜய்
பெரம்பலூர் செல்வது சாத்தியமாகாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். அதே நேரத்தில், விரைவில் மற்றொரு நாளில் கண்டிப்பாக வருவேன் என்று உறுதியளித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்வதாக விஜய் அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக நேற்று திருச்சியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். அதன்பின் அரியலூர், குன்னம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூடியதால் பெரம்பலூர் பயணம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்ட பதிவில்,
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான்தான் வரேன் என்ற மக்கள் சந்திப்பு, திருச்சியில் உற்சாகமாகத் தொடங்கியது. தொடர்ந்து அரியலூர், குன்னம் வரை பயணம் நீண்டது. அங்கு மக்களின் பேரன்பும் பேராதரவும் என்னை ஆழமாக நெகிழ வைத்தது. இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த நிகழ்வுகளை சிறப்பாக நடத்த பாடுபட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் மிகுந்த மக்கள் திரளின் காரணமாக பெரம்பலூர் செல்வது சாத்தியமாகவில்லை. எனவே அங்கு ஆவலுடன் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை சந்திக்க இயலாமல் போனது எனக்கு பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது.
அனைவரது நலனை கருத்தில் கொண்டு, பெரும் வருத்தத்துடன், மீண்டும் மற்றொரு நாளில் பெரம்பலூர் வருவதாகத் தீர்மானித்துள்ளேன். ஆவலுடன் காத்திருந்த மக்களிடம் மீண்டும் என் மன்னிப்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயம் உங்களை சந்திக்க வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.