தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, சுயதொழில் மானியம்: அமைச்சரவை ஒப்புதல் அளித்த 6 புதிய திட்டங்கள்
பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், சுயதொழில் தொடங்க ரூ.3.50 லட்சம் வரை மானியம், இலவச காலை உணவு உட்பட 6 புதிய திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் 6 புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு, முதல்வரின் லண்டன், ஜெர்மனி பயணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தூய்மைப் பணியாளர்களுக்கான 6 புதிய திட்டங்கள்:
- தொழில்சார் நோய்கள் கண்டறிதல் மற்றும் சிகிச்சை:
தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது ஏற்படக்கூடிய நுரையீரல், தோல் நோய்கள் போன்ற தொழில்சார் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.
- பணியின்போது உயிரிழப்புக்கு காப்பீடு:
பணியின்போது உயிரிழந்தால் நலவாரியத்தின் நிதியுதவிக்கு கூடுதலாக, ரூ.5 லட்சம் காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால், குடும்பங்களுக்கு மொத்தமாக ரூ.10 லட்சம் நிதியுதவி கிடைக்கும்.
- சுயதொழில் மானியம்:
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் சுயதொழில் தொடங்கினால், திட்ட மதிப்பீட்டில் 35% நிதி, அதிகபட்சம் ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். கடன் திருப்பிச் செலுத்தும் போது 6% வட்டி மானியமும் கிடைக்கும். இதற்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது.
- கல்வி உதவித்தொகை:
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், உயர்கட்டண சலுகைகள், விடுதி கட்டணம், புத்தகக் கட்டண உதவித்தொகை வழங்கப்படும்.
- வசதி திட்டங்கள்:
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும். கிராமப்புறங்களில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீட்டு ஒதுக்கீடு முன்னுரிமை பெற்றுள்ளது.
- இலவச காலை உணவு:
அதிகாலையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இலவச காலை உணவு வழங்கும். முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, பிற நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவாக்கப்படும்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தது: “தூய்மைப் பணியாளர்களின் நலன்கருதியும், மற்ற கோரிக்கைகளையும் மனதில் வைத்துக் கொண்டு, வேலைநிறுத்தத்தை விடுத்து பணிகளுக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.”