இந்திய இறையாண்மையை பாதுகாக்க உறுதியேற்போம்: அரசியல் கட்சித் தலைவர்கள் சூளுரை
நாட்டின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது.
- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சுதந்திரத்தை பேணிக்காத்து, எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதற்கேற்ப அனைத்து தரப்பு மக்களும் வளம் பெற சுதந்திர தின நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
- பாமக தலைவர் அன்புமணி: தமிழக மக்களின் இன்றைய உண்மையான தேவை சமூகநீதி உள்ளிட்ட அனைத்து உரிமைகளுடனும், சுதந்திரமாகவும் வாழும் உரிமை தான். அதை ஜனநாயகம் என்ற கருவியைக் கொண்டு தான் வென்றெடுக்க வேண்டும்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மதவெறி, சாதி ஆதிக்க சக்திகளை அதிகாரத்தில் இருந்தும், சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற இந்நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், ஒற்றுமைக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் துணை நிற்போம். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நம் முன்னோர்கள் நமக்காகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பதோடு, சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு தாய்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட இந்நாளில் உறுதியேற்போம்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்காமல் இருக்க பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை பாதுகாப்போம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
இதோடு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் நாகூர் ராஜா, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Facebook Comments Box